தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. திமுக மூத்த நிர்வாகியான இவர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இதனிடையே, 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு நீதிபதி, பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இதனிடையே, இந்த வழக்கில் பொன்முடி, மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டபோதும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பொன்முடி நேற்று ( 22.12.2023 ) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். முதல்-அமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள பொன்முடி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சந்தித்து பேசினார். அரசியலில் இருந்து மு.க.அழகிரி விலகி உள்ள நிலையில் பொன்முடியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.