Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.25 கோடிக்கு மது விற்பனை- திருச்சிக்கு 4-வது இடம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 5 வெளிநாட்டு மதுபானங்களுடன் கூடிய மதுபான விற்பனை கூடங்கள் உட்பட 161 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 105 கடைகள் பார்களுடனும், இதர கடைகள் பார் இல்லாமலும் இயங்கி வருகின்றன. மேலும், கலால் துறை மூலமாக இயங்கும் 12 மனமகிழ் மன்றம், 32 ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்ட மதுபான விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் டாஸ்மாக் கடைகள் மூலமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.4 கோடியே 50 லட்சத்துக்கு மது விற்பனையாகி வருகிறது. விழா காலங்களில் கூடுதலாக மது விற்பனையாகும். அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10, 11, 12 ஆகிய 3 தேதிகளில் ரூ. 25 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வழக்கமாக சனிக்கிழமை சுமார் ரூ.5 கோடிக்கு மது விற்பனையாகும். அதேபோன்று ஞாயிற்றுக் கிழமைகளில் ஐந்தரை கோடி முதல் 6 கோடி வரை விற்பனை இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த 3 நாட்களில் கூடுதலாக ரூ.9 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது என்றார். இதில் பீர் பாட்டில்கள் அதிக அளவு விற்பனையாகியுள்ளது. இதேபோன்று திருச்சி மாநகரில் உள்ள மனமகிழ் மன்றம், எலைட், ஓட்டல்களில் ஒருங்கிணைந்த பார்கள் ஆகியவற்றிலும் பல கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. அதிக மது விற்பனையில் மதுரை, சென்னை, கோவைக்கு அடுத்து நான்காவது இடத்தை திருச்சி பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்