உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை…* மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில், நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் அதே ஆம்புலன்சில் நோயாளியாக செல்வார்’ என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். அவரது இந்த பேச்சுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் உயிர் காக்கும் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது. தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை என்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
Comments are closed.