தமிழ்நாட்டில் 26 ஆயிரத்து 349 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்போர் எழுத்தறிவு மையங்களை பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. இவற்றின் மூலம் தினமும் 2 மணி நேரம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் என்ற 5 ஆண்டுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத அனைவருக்கும் பயன்தரும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலை பள்ளிகளின் வளாகங்களில் 26 ஆயிரத்து 349 கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தலா ஒரு தன்னார்வலர்கள் அடிப்படை எழுத்தறிவு கல்வியைக் கற்பிக்கும் பணிகளில் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட உள்ளனர். இதன் தொடர்ச்சியாக 2024 பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்த திட்டத்தின் கீழ் கற்கும் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்டு சான்றுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.