கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து பலர் பலியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படுவதை குறிப்பிட்டுள்ள அந்த பதிவில், சட்டவிரோத மது தயாரிப்பு மற்றும் நுகர்வை தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை இது பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மாநில அரசின் அலட்சியத்தால் கள்ளச்சாரயம் குடித்து சிலர் பலியானதாகவும் தற்போதைய ஆட்சியில் மது மற்றும் போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளதை பல முறை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இத்தகைய செயல்பாடுகளை ஆளுங்கட்சி கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அவர் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.