திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் என்கின்ற அம்ப்ரோஸ். (வயது 38). பெயிண்டர். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று ( 08.11.2023 ) கல்லக்குடியில் இருந்து வடுகர்பேட்டை நோக்கி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் ஆகியோர் சிதம்பரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கணபதி, காரை ஓட்டினார். கல்லக்குடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதுடன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அகஸ்டின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. மேலும், காரில் வந்த பால்ராஜ், கணபதி ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அகஸ்டின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.