Rock Fort Times
Online News

திருச்சி, புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிகுடி திருவிழா:* ஆயிரக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்த மருளாளி…!

திருச்சி, புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் குட்டிகுடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் உள்ளூர் மற்றும் வெளியிடங்களில் வசிக்கும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்வர். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான குட்டிகுடி திருவிழாவுக்காக பிப்.25-ந் தேதி இரவு காப்பு கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 9-ந் தேதி மறுகாப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. முதல்நாள் விழாவில் பக்தர்கள் தாரை, தப்பட்டை முழங்க மலர்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். பின்னர், அம்மனை ஊர்வலமாக புத்தூர் மந்தையில் உள்ள பதுவு கோயில் அருகே கொண்டு வந்து சேர்த்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று, சுத்த பூஜையை முன்னிட்டு அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. வீதிகள்தோறும் வலம் வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக, பக்தர்கள் ஆட்டுக்கிடாக்களை பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று(மார்ச் 12) கோலாகலமாக நடைபெற்றது. முதலில் சர்க்கார் குட்டி கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான குட்டிகளை கோவில் மருளாளி குறிஞ்சி குடித்தார். பின்னர் அந்த ஆட்டுக்குட்டிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிமாறினர். இந்த குட்டிகுடி திருவிழாவில் திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளதால் புத்தூர் விழா கோலம் பூண்டுள்ளது. பல்வேறு இடங்களில் அன்னதானம் நடை பெற்றது. நாளை 13-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 14 – ந் தேதி அம்மன் குடி புகுதல் நிகழ்வும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், ஊர்ப் பொதுமக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்