திருச்சி, தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் குட்டி குடி திருவிழா… * ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்த மருளாளி!
திருச்சி, தென்னூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 19ம்தேதி காப்புக்கட்டுதல் மற்றும் அம்மன் குடியமர்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் சிகர நிகழ்ச்சியாக இன்று ( ஏப்ரல் 3) ஓலைத்தேரில் அம்மன் திருவீதிஉலா வரும் வைபவமும், அதனைத் தொடர்ந்து குட்டி குடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. வண்ணப் பூக்கள் மற்றும் ஓலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைத் தேரில் உக்கிரமாகாளியம்மன் எழுந்தருளி அனைத்து வீதிகளிலும் உலா வந்து பின்னர் தென்னூர் மந்தையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கருப்பண்ணசாமி மற்றும் உக்கிரமாகாளியம்மன் அருள்பெற்ற மருளாளி பிரபாகரன் பக்தர்களால் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். பலியிடப்பட்ட ஆடுகளைக் கொண்டு சமையல் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Comments are closed.