திருச்சி, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்…! * 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
திருச்சி, திருவெறும்பூரில் மலை மீது அமைந்துள்ள நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். திருநாவுக்கரசர் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளார். இக்கோவிலில் எறும்பீஸ்வரர் புற்று வடிவில் எழுந்தருளியுள்ளார்.அம்பாள் நறுங்குழல் நாயகியாக அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் கடந்த 1998 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 31ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், 4ம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மாலை முதல் யாகசாலை பூஜை தொடங்கியது. அதன்பிறகு 5 மற்றும் 6-ம் தேதிகளில் காலை, மாலை என இரு நேரங்களிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று(07-04-2025) காலை 5 மணிக்கு 6ம் காலம் பூஜை நடந்தது. தேவார பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், ஹோமம், வேதபாராயணம் ஆகியவையும் நடைபெற்றன. அதன்பிறகு காலை 9.15மணிக்கு சுவாமி, அம்பாள், சிறிய ராஜகோபுரம், விநாயகர், சண்முகர், எறும்பீஸ்வரர், நறுங்குழல் நாயகி, சண்டிகேஸ்வரர் ஆகிய மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமசிவாய…என்ற விண்ணதிர முழங்கினர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவில் அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன், திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன் வார்டு கவுன்சிலர் சிவகுமார் மற்றும் இந்து சமய அற நிலைய துறை அதிகாரிகளும், ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் போன்றவை வழங்கப்பட்டன. திருவெறும்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்தில் 16 இடங்களில் போலீசார் சிறப்பு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று இரவு எறும்பீஸ்வரர் கோவிலில் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அமைச்சருக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம்.பழனியப்பன் தலைமையில் அறங்காவலர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கும்பாபிஷேக யாகசால பூஜை ஏற்பாடுகளை தொழிலதிபர் ரவீந்திரன் செய்திருந்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வித்யா மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 27 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.