கோவை இடிகரைப் பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை துடியலூரை அடுத்த இடிகரைப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இடிகரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பாலை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் வரை பாலை கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்து வருகின்றனர். கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பால் அப்பகுதி பொதுமக்கள் வாங்கிச் செல்வதுடன் மீதமுள்ள பாலை ஆவினுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இந்த நிலையில் மாடுகளை பராமரிப்பதற்கு தேவையான தீவனம் விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலை கட்டுப்படி ஆவதில்லை , எனவே தமிழக அரசு ஆவின் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று இடிகரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
