கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி கோவை மாநகர காவல் துறை, பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் ட்ரோனை எவ்வாறு கையாள்வது, குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு வீசுவது போன்று செய்து காண்பிக்கப்பட்டன. அதே சமயம் கலவரம் நிகழ்வது போன்றும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிப்பது போன்றும் கலவர இடத்தில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் மாணவர்கள், பேராசிரியர்கள், கோவை மாநகர ஆயுதப்படை காவல் துணை ஆணையர் முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் உட்பட மாநகர காவல் துறையினர் கலந்து கொண்டனர்.