Rock Fort Times
Online News

மக்களின் தேவை அறிந்து அனைத்து பணிகளும் நிறைவேற்றித் தரப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி…!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவளர்ச்சிப் பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம், அய்யன்புதூர் கிராமத்தில் நெசவாளர் காலனிக்கு 2 கி.மீ. புதிய தார்ச்சாலை, சூரியூரில் புதிய துணை சுகாதார நிலையம், சோழமாதேவியில் சமுதாயக் கூடம், நவல்பட்டு ஊராட்சியில் உய்யக்கொண்டான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் என ரூ.3.85 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மேலும், துணை சுகாதார நிலையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். சூரியூர், நவல்பட்டு, குண்டூர், சோழமாதேவி ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 4 ஆண்டுகளில் மக்களை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தேர்தலில் அறிவிக்காத பல திட்டங்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் மாணவர், மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி மக்களிடம் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அந்த கோரிக்கை மனு மீது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவெறும்பூர் தொகுதி மக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று, செயல்படுத்தப்ப்டட பணிகள் இப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல, மக்களின் தேவைகளை அறிந்து தொகுதிக்கான அனைத்துப் பணிகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றார். இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, திருவெறும்பூர் ஒன்றிய குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி திருமுருகன், சண்முகசுந்தரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்