கரூரில், செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(அக்.3) தொடங்கியது. விசாரணையின் போது நீதிபதிகள் அரசு தரப்பிடமும், தவெகவிடமும் சரமாரி கேள்விகளை முன் வைத்தனர். மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினீர்கள்? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே? பரப்புரைக் கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர், சுகாதார வசதிகளை சட்டம்-ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய பொதுநல வழக்கில், “மனுதாரர் பாதிக்கப்பட்டவரா? போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றலாம். வழக்கு முதற்கட்ட விசாரணையில் இருக்கும் நிலையில் ஏன் சிபிஐ விசாரணை கோருகிறீர்கள் எனக்கூறியதுடன், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனவும் காட்டமாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில், ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ள கட்சிகளுக்கு கூட்டம் நடத்த தடையில்லை. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என தெரிவித்தனர். கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு தொடர்பான மனுக்களுக்கு, பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.