கன்னியாகுமரியில் 50 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி- மார்ச் 2-ம் தேதி நடக்கிறது…!
கன்னியாகுமரியில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி மார்ச் மாதம் 2-ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் விஷாக ஹரி, வழக்கறிஞர் கனிமொழி, யோகினி சிவப்ரியம்பா சரஸ்வதி, யோகினி ஜெயம்பா சரஸ்வதி, கீதா சம்பத் ஆகியோர் திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கர்மயோகினி சங்கமம் என்பது பாரத திருநாட்டில் அவதரித்த வீர பெண்கள் ராணி அகல்யா பாய் ஹோல்கர், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதத் திருநாட்டின் சமூகத்தை கட்டிக் காத்த பெண்கள் அன்னை சாரதா, அவ்வையார், அம்மா அமிர்தானந்தமயி, திலகவதி அம்மையார், இந்த பாரத தேசத்திற்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த பெண்கள் வெட்டு காளியம்மன், வீரமங்கை குயிலி, ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்ற ஆன்மிகத்தைப் பரப்பிய பெண்கள், தன் கணவனையும், தன் மகனையும் இந்த நாட்டிற்கு அர்ப்பணித்து அதற்காக தன் சுக போகங்களை தியாகம் செய்து இந்த நாட்டிற்காக வாழ்க்கையை தியாகம் செய்த பெண்கள் சுப்ரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள், வ. உ. சிதம்பரம் பிள்ளையின் மனைவி மீனாட்சி அம்மாள் போன்றோர்களை கௌரவிக்கும் விதமாகவும், அவர்களின் அருமை, பெருமைகளை இந்த தேசம் எப்பொழுதும் போற்றுமாறும், வருங்கால தலைமுறை இவர்களின் தியாகங்களை பின்பற்றி வழி நடக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியானது மார்ச் மாதம் 2ம் தேதி நாகர்கோவில் கன்னியாகுமரி அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சத்குரு மாதா அமிர்தானந்த மயி தேவி முன்னிலை வகிக்கிறார். ஏவுகணை பெண்மணி டெஸ்ஸி தாமஸ் தலைமை தாங்குகிறார். ஆர்எஸ்எஸ் அகில பாரத பொது செயலாளர் ஸ்ரீ.தத்தாத்ரேய ஹோசபலே சிறப்புரை ஆற்றுகிறார். டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் துவக்க உரையாற்றுகிறார். கலைமாமணி விசாகஹரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக கன்னியாகுமரியில் இருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சங்கமத்தில் பாரத தேசத்தில் உள்ள பெண் துறவிகளுக்கு மரியாதை செய்யும் விதமாக அவர்களுக்கு பூஜைகள் செய்யப்பட உள்ளன. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் இந்த பாரத தேசத்தில் போற்றப்படுகின்ற பெண்களை கௌரவிக்கும் விதமாக புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பெண்மணிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர அழைக்கின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments are closed.