அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும், இல்லை என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்காத கட்சித் தலைமை, அவரிடம் இருந்து அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பறித்தது. மேலும், அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் கட்சி தலைமை பறித்தது. இந்நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் இருந்து புறப்பட்டு இன்று (செப்.8) காலை கோவை வந்தார். கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹரித்துவாரில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்கிறேன். மனம் சரியில்லாததால் கோயிலுக்குச் செல்வதற்காக வந்திருக்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை. 9-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. கலங்கிப் போய்விட வேண்டாம், நியாயமான கோரிக்கையைத்தான் வைத்துள்ளீர்கள் என தொண்டர்கள் சொல்கிறார்கள். எனவே, கோயிலுக்குச் சென்று விட்டு வந்தால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் கூறவில்லை. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்துக்கு நான் பதில் கூற முடியாது. நல்லதுக்கு நாம் சொல்கின்றோம். பல்வேறு முடிவுகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்துள்ளார். அவர் முடிவுக்கு கருத்துகள் சொல்ல முடியாது. காலம்தான் பதில் சொல்லும். பாஜக தலைவர்களை சந்திக்க நான் ஹரித்துவார் செல்லவில்லை. ராமரை சந்திக்க செல்கிறேன். வேறு யாரையும் சந்திக்கவில்லை. நாளை பிற்பகல் திரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

Comments are closed.