Rock Fort Times
Online News

அரசியலில் பரபரப்பு: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார், கே.ஏ. செங்கோட்டையன்…!

அதிமுக ஒன்றிணையா விட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்று அதிரடியாக பேசியதுடன் பிரிந்து சென்றவர்களை 15 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்கள் ‘கெடு’ விதித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். இதனால், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேவர் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் ஒன்றாக சென்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கை கோர்த்ததால் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் இருந்தவர் செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்துவரும் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் இன்று(26-11-2025) தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார். அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, ”இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,” என்று கூறினார். செங்கோட்டையன் கோவை மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்