திருச்சி, சூரியூரில் ரூ.3 கோடியில் பிரம்மாண்டமாக அமையப்போகுது ஜல்லிக்கட்டு மைதானம்- * துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்…!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் இன்று(19-02-2025) காலை திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு
திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து அவர், திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் ரூ.3 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாக்களில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, மண்டலத்தலைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். விழாவில்,
ஜல்லிக்கட்டு காளைகளுடன் அதன் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் அலுவலகம், முக்கிய விருந்தினர் தங்குவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் உடை மாற்றுவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டை சுமார் 800 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பார்வையாளர் மாடம் போன்றவை அமைய உள்ளது. அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி புதிதாக அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் நடைபெறும். 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதி பெற அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். நாளை இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம் நடைபெற உள்ளது. அதிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளோம். தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.