திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே அளுந்தூர் கிராமத்தில் உள்ள தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (10.03.2024) நடந்தது. திருச்சி, புதுக்கோட்டை உள்பட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 350 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல, வீரர்களிடம் பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டு களித்தனர் .
காளைகளை அடக்க முயன்றபோது மாடுகள் முட்டியதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பூபதி ராஜா (25), குஜிலியம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (25), பாகனூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (35), கோடாங்கிபட்டியைச் சேர்ந்த சின்னு (35), விராலிமலையை சேர்ந்த விஜயகுமார் (27) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.