ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் இன்று(04-02-2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 – ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 16ம் தேதி அனைத்து வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், 25ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என ஜாக்டோ – ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மயில், செல்வராஜ், பொன்னிவளவன் ஆகியோர் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தமிழக அரசு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
முதலமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என நம்புகிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் . எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ ஜியோ சார்பில் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கவில்லை. முதலமைச்சர் குறித்து எந்த கருத்தையும் தாங்கள் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

Comments are closed.