முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு தொடர்புடையதாக கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு !
காலையில் பெரும்பாலும் இட்லி, வடை, சாம்பார் என்றுதான் மெனு இருக்கும். ஆனால் இன்று அதிகாலையிலேயே ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு, வருமான வரி துறையினர் “பொங்கலோ பொங்கல்” வைத்திருக்கிறார்கள்.
சென்னை, கோவை, திருச்சி ,ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று ஆந்திரா, தெலுங்கானா, பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை டேப் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி திருவானைக்காவல், விமான நிலையம் அருகே உள்ள மொரைஸ் சிட்டி ஆகிய இடங்களில் இந்நிறுவனம் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. அதன் தலைமை அலுவலகம் திருச்சி ஒத்தக்கடை டேப் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வருகிறது. தற்போது டேப் காம்ப்ளக்ஸில் உள்ள அலுவலகத்தில் திருச்சி வருமானவரித்துறை பெண் அதிகாரி தலைமையில் நான்கு பேர் சோதனையிட வந்துள்ளனர். காலை 8 மணி முதலே இவர்கள் காத்திருக்கின்றனர். ஆனாலும் ஜி ஸ்கொயர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் ஊழியர்கள் வருகைக்காக காத்திருந்தனர்.பின்னர் அலுவலகத்தை திறப்பதற்காக 9.45 மணிக்கு ஊழியர்கள் வந்தனர் . பின்னர் அலுவலகத்தில் உள்ளே சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தற்சமயம் துவக்கி உள்ளனர்.
முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் தென்மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் ப்ளாட்டுகள் மற்றும் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது, பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக200 நாட்கள் ஆகும். ஆனால் கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு 8 நாட்களிலேயே டிடிசிபி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என திமுக அரசு தெரிவித்திருந்தது. எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர் ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும் நிலை இருப்பதாக தெரிவித்தார்.இந்தநிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனை சம்பவம் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.