Rock Fort Times
Online News

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று மத்திய அரசு பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது- * த.வெ.க. தலைவர் விஜய்…!

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச அணுகுமுறை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும்.

நூற்றாண்டு காணும் விகடனின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன? மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையதளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய பாசிச அணுகு முறையே. பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும், அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்