Rock Fort Times
Online News

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு..?- கனிமொழி எம்பி…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் திமுகவில், கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அந்தவகையில் சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் இன்று (ஜன.30) நடைபெற்றது. கனிமொழி எம்.பி தலைமையில் குழு உறுப்பினர்கள் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், தமிழரசி ரவிக்குமார், செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். பின்னர் கனிமொழி எம்பி கூறுகையில், “திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாகத் தந்து வருகிறார்கள். “ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்” என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என்கிற நம்பிக்கையோடுதான் மக்கள் மனுக்களைத் தருகிறார்கள். நிச்சயமாகப் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அவ்வாறு எந்தக் கட்சி வரும், யாரை இணைப்பது என்பதைப் பற்றிய முடிவை முதல்வர்தான் அறிவிப்பார். எந்தக் கருத்துக் கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் என்பது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தியுடனான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை. உறவு சுமுகமாகவே உள்ளது” என்றார் . காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன்மானமே முக்கியம் என்று பேசியது குறித்த கேள்விக்கு, ”எல்லாருக்கும் தன்மானம்தான் முக்கியம். சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. தன்மானம் முக்கியம் இல்லை என்று யாரும் சொல்லப்போவது இல்லை” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்