Rock Fort Times
Online News

இந்த ஆண்டு மட்டும்தான் கோடை காலமா..? 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத்தொகை 13-ம் தேதியே வரவு வைக்கப்படுவது ஏன்..?- விஜய் கேள்வி..!

தமிழ்நாட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று( பிப்.13) திடீரென 3 மாதங்களுக்கு மொத்தமாக சேர்த்து 3000 மற்றும் கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2000 என ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “புதிதாக கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2,000 திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைகாலம் வருகிறதா என்ன?. வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத்தொகை, குறிப்பாக இன்று 13-ம் தேதியே வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?. இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமல்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு ஏற்பட்ட அச்சம்தான் இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லதைச் செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்கு போட்டியாகக் கருதுவதும், தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத்தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்த உரிமைத்தொகையை சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காக சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும், அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்