வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு அழைப்பு…!
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்ககள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ந்தேதி அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் நவம்பர் 2 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள “ஓட்டல் அகார்டில்” நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் நமது அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என உறுதி அளிக்கிறோம். மக்களாட்சியையும், மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.