ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை… * வழக்கு விசாரணை 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது. அப்போது படத்திற்கு எதிராக தணிக்கை வாரியத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருப்பதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது. இதனையடுத்து படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை தாக்கல் செய்ய மத்திய தணிக்கை வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று(ஜன. 9) வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ‘ஜனநாயகன்’-ல் இருக்கும் பிரச்சனைகளை குறிப்பிட்டு, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தார், படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிபதி பி.டி.ஆஷாவின் இந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மேலும் இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தது. அதற்கு நீங்கள் மனுவை தாக்கல் செய்யுங்கள். எப்போது விசாரிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவுசெய்து கொள்கிறோம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இந்நிலையில் மனுவிசாரணை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. அப்போது தனி நீதிபதி உத்தரவு தொடர்பாக கேள்விகளை அடுக்கிய தலைமை நீதிபதி, மறுஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து படநிறுவனம் வழக்குத் தொடரவில்லை. ஆனால் தனி நீதிபதி அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார். தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி எதற்காக உத்தரவு பிறப்பித்தார்? சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Comments are closed.