தமிழக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண்மை பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து, 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். விவாதத்தின் நிறைவு நாளான நேற்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அவருடைய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனால், சட்டசபையில் அனல் பறந்தது என்றாலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவாதத்தின்போது அவையில் இல்லை. இந்தநிலையில், சட்டசபையில் இன்று (20-02-2026) பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் அவைக்கு வரவில்லை. அதேநேரத்தில் ராமதாஸ் ஆதரவு பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, அருள் ஆகியோர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள நிலையில், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதற்கு முன்பு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான முதல்-அமைச்சரின் பதிலுரையையும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.