பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது- திருச்சியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு…!
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா இன்று(29-03-2025) நடைபெற்றது. ஆட்சிமன்ற குழு தலைவர் ஜலாஜ் தானி தலைமையில் நடந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 457 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பின்னர் அவர் விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், இன்று ஏராளமான வாய்ப்புகள் நம் நாட்டிலேயே உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவை உலக நாடுகள் கண்டு கொள்ளவே இல்லை. மிகவும் ஏழ்மையான, வளராத நாடாக இந்தியா இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பொருளாதாரத்தில் உல்கின் முதல் நாடாக இருந்தது. காலணி ஆதிக்கத்திற்கு பின் அது மிகவும் பின்னோக்கி சென்றது. ஆனால், தற்போது பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமை கோட்டிலிருந்து மேலே வந்துள்ளனர். நாடு வளரும்போது நாட்டு மக்களும் சேர்ந்து வளர்கிறார்கள். 2047 இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம். இலக்கை சிறிதாக வைத்து கொள்ளாதீர்கள். பெரிதாக வைத்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் தோல்வி வரும். வந்தால் அதை ஏற்று கொள்ள வேண்டும். துவண்டு போய் விட கூடாது. மீண்டு எழ வேண்டும் வளர்ச்சி என்பது உடல்ரீதியாக, அறிவு ரீதியாக, ஆன்மிக ரீதியாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆன்மீக உணர்வையும் ஒவ்வொருவரும் வளர்த்து கொள்ள வேண்டும். இன்று பெண்கள் பலர் பட்டம் பெற்றுள்ளீர்கள். பெண்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் நம் நாட்டில் அதிகம் உள்ளது. எல்லா விதமான தடைக்கற்களையும் தகர்த்து பெண்கள் முன்னேற வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஐ.ஐ.எம்.இயக்குனர் பவன்குமார் சிங் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.