Rock Fort Times
Online News

திருச்சி திருவெறும்பூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி…!

அலட்சியம் காட்டும் ஏரியா கவுன்சிலர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் சாக்கடை நீரோடு மழைநீரும் கலந்து பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் இந்த திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள்,  பணிகள் முடிவுற்ற பின்னரும் இன்னும் மூடப்படாமல் அப்படியே கிடக்கின்றன. அந்தவகையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் 41- வது வார்டு,  டி நகர் பிரதான வீதியில் கடந்த 4 நாட்களாக பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. அந்தத் தண்ணீர் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு ஆள் உயரத்திற்கு தேங்கி நிற்கிறது. மேலும், அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. டாக்டர்கள், இன்ஜி னியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசித்து வருகின்றனர். இவ்வளவு ஏன் இந்த வார்டு காங்கிரஸ் கவுன்சிலரே இந்தப் பகுதியில் தான் வசித்து வருகிறார்.  பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடப்படாததால் இந்த பகுதி மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், குடிநீர் குழாய் உடைந்து விட்டதால் கடந்த நான்கு நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சப்ளையும் இல்லை. இதனால், இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்ட வீட்டின் அருகே வசிக்கும் 70 வயது நிரம்பிய முதியோர் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,  எங்கள் ஏரியாவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மூடப்படவில்லை. மேலும், குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு எங்கள் பகுதிக்கு நான்கு நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.இதனால், போதிய குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இதுகுறித்து ஏரியா காங்கிரஸ் கவுன்சிலர் கோவிந்தராஜிடம் தகவல் தெரிவித்தபோது அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல, எந்த குறையை தெரிவித்தாலும்  அவர் அலட்சியமாகவே இருக்கிறார். இனியும் அவரை நம்பி எந்த பயனும் இல்லை. ஆகவே, பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை விரைவில் சீரமைத்து எங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்