திருச்சி மலைக்கோட்டை அருகே கீழ ஆண்டார் வீதி- பாபு ரோடு சந்திப்பு பகுதியில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில்
கீழஆண்டார் வீதி புதுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்தசாரதி (வயது 45) என்பவர் பூசாரியாக உள்ளார். இவருடைய சகோதரர்களும் பூசாரியாக உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கையில் ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் கத்தியுடன் கோவிலுக்கு உள்ளே ஒருவர் நுழைந்தார். பின்னர் அவர்
சுருட்டு பிடித்தபடி கருவறைக்குள் செல்ல முயன்றார். அவரை பூசாரி பார்த்தசாரதி தடுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த நபர், தான் கொண்டு வந்த கத்தியால் பார்த்தசாரதியின் கழுத்தை அறுத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்து பார்த்தசாரதியை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பூசாரியை கத்தியால் குத்திய அந்த நபரை கோயிலுக்குள் வைத்து பூட்டினர். தகவலறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தென்னூர் இனாம்தார்தோப்பை சேர்ந்த குணசேகரன் (40) என்பது தெரிய வந்தது. தன்னை கருவறைக்குள் செல்ல விடாமல் தடுத்தபோது தனக்கு அருள் வந்ததாகவும் அதன்பிறகு என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்குள் பூசாரி கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.