Rock Fort Times
Online News

திருச்சியில் போதை பொருட்கள் வைத்திருந்த 8 பேர் கும்பலை கூண்டோடு தூக்கியது காவல்துறை…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  வருண்குமார் ஐபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்து கட்டப்பஞ்சாயத்து  செய்து நிலத்தை அபகரித்தவர்கள், போதை பொருட்கள் விற்பவர்கள்,  புகையிலை பொருட்கள் விற்பவர்கள், கள்ளத்தனமாக மது  விற்பவர்கள் என குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்து வருகிறார். இந்தநிலையில் இன்று(14-11-2024) கொள்ளிடம் பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்து போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக எஸ்பி வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போதை பொருட்கள் விற்கும் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள்  மணிகண்டன்(23), சிஜு(33), பாலசுப்பிரமணியன் (38), பிரவீன் குமார்(42), வினோத் குமார்(28), ராமசாமி(42), பார்த்திபராஜ்(31), சுபீர் அஹமது(37) என்பதும், அவர்கள் போதை மருந்துகளை பயன்படுத்தியதும் விற்றும் வந்தது தெரிய வந்தது. மேலும், அவர்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு செயலியை உருவாக்கி பலருக்கு கொரியர் மூலம் போதை பொருட்களை விற்றதும் தெரிய வந்தது.  அதன்பேரில் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமின், சோடியம் குளோரைடு, ஊசிகள், செல்போன்கள், 16 கிராம் தங்க செயின், கேமரா, கார் மற்றும் ரூ.5,125 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிரபல கொரியர் நிறுவனத்தின் மீதும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்