தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் பணத்திற்கு ஆசைப்படும் ” லாட்டரி மாஃபியா” கும்பல் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதைத்தடுக்க போலீசார் அவ்வப்போது ரெய்டு உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மிக சமீபத்தில்கூட, தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒரு கும்பல் செல்போன் மூலம் டிஜிட்டல் முறையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்கும்பலை ஆதாரங்களுடன் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து, திருச்சி உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோளம்பாறை ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இரு நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய அடுத்த கட்ட விசாரணையில், திருச்சி சண்முகா நகரை சேர்ந்த கோவிந்தன் மகன் சிவக்குமார், மற்றும் இந்திரா நகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கணேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவ்விரு நபர்களும் திருச்சி மாவட்டம் முழுவதும் முறைகேடாக டிஜிட்டல் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து இவ்விரு நபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 லட்சத்து80 ஆயிரம் பணம், 5 செல்போன்கள், 5 லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றினர்.மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள லாட்டரி வியாபாரிகள் யார் ? யார் ? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Comments are closed.