இன்றைய காலகட்டத்தில் புதிய தொழில்நுட்ப வசதியுடன் செல்போன்கள் குவிந்து வருகின்றன. செல்போன்களால் நன்மைகள் பல இருந்தாலும் ஆபத்தும் கூடவே இருக்கிறது . அதில் ஒன்றுதான் “ரீல்ஸ்”. உயரமான கட்டிடங்களில் நின்று வீடியோ எடுப்பது, ஓடும் பஸ்ஸில், ரயிலில் வீடியோ எடுப்பது, நெருப்பு வளையம் ஏற்படுத்திக் கொண்டு தண்ணீரில் குதிப்பது, மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வது என பலர் ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அந்தவகையில் ஒரு காதல் ஜோடி ரீல்ஸ் வெளியிட்டு போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டு அபராதம் செலுத்தி உள்ளனர். இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது. காதலனை பெட்ரோல் டேங்கின் முன்புறம் அமர வைத்து, சேலை கட்டிய பெண் ஒருவர் தலைக்கவசம் இன்றி வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்குவது போன்று அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பலரும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி இருந்த தகவல்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பழங்கரை பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர், தனது காதலியுடன் இணைந்து இந்த வீடியோவை பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, ஆபத்தான முறையில் வீடியோ பதிவிட்டது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அந்த ஜோடியை அனுப்பி வைத்தனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.