திருவெறும்பூரில் ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் அடிக்கல் நாட்டினர்!
திருச்சி சிட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஞ்சப்பூரில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. நேற்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதேபோல திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில், புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று( 10-01-2026) நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினர். விழாவில், மாவட்ட கலெக்டர் வே .சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் மற்றும் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 6வது மாநில நிதி ஆணையம் 2025–26 நிதியாண்டின் கீழ் ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் திருவெறும்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.