Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி பகுதியில் 34,972 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- ஆணையர் மதுபாலன் தகவல்..!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களுக்குள் உள்ள தெரு நாய்களில் 34,972 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் அவசர, அவசியம் கருதி, கணக்கெடுப்பு அறிக்கையின்படி இம்மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் 43,767 தெருநாய்களில் 29,972 தெருநாய்களுக்கு கருத்துடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 34,972 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஶ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி, இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 227 அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள், 63 அரசு மருத்துவமனைகள் மற்றும் 208 தனியார் மருத்துவமனைகள், 3 பேருந்து நிலையங்கள் மற்றும் 5 இரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபின், தேவையான உணவுகள் வழங்கி பாதுகாத்து பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள முப்பரிமாண வண்ண மாதிரி வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு மையங்களின் கட்டிடங்கள் ஶ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு மையங்களின் அருகில் பிரத்யேகமாக கட்டுவதற்கான கட்டிட பணிகள் ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது. இம்மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடிக்கான மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் வெறிநாய்கடி சம்பந்தமான சிகிச்சைக்கான தொடர்பு அலுவலர் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தேசிய வெறிநாய்கடி நோய் தடுப்பு திட்டத்தின்படி சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களுக்கு கடிபட்ட நாள், 3ம் நாள், 7ம்நாள் மற்றும் 28 ம் நாள் ஆகிய தினங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்