Rock Fort Times
Online News

மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல; வீழ்ச்சி மாநாடு…

டி.டி.வி. தினகரன் கிண்டல்..

தஞ்சையில் இன்று ( 21.08.2023 ) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல; வீழ்ச்சி மாநாடு. இந்த மாநாட்டுக்கு 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வருவார்கள் என்று முன்னாள் அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால், இவ்வளவு பணம் செலவு செய்தும் 2 லட்சம் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வாகனத்திற்கு 5 பேர் மட்டுமே வந்துள்ளனர். மாநாட்டில், எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவர் என்ன புரட்சி செய்து விட்டார். புரட்சி என்கிற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டது. அவருக்கு துரோகத் தமிழர், துரோகத்திற்கு எடுத்துக்காட்டான தமிழர் என்று பட்டம் கொடுக்கலாம். பழனிச்சாமிக்கும், ஸ்டாலினுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இரண்டு பேரும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள் போல் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்று சக்தியாக வருங்காலத்தில் அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பிஜேபியுடன் எப்போதும் எனக்கு உறவு இல்லை. தேர்தலுக்கான கூட்டணி என்பது யார் வரக்கூடாது, யாரை வரவிடக்கூடாது என்பதற்காகத்தான். எங்களை பொறுத்தவரை தீய சக்தியான திமுக எந்த நேரத்திலும் வெற்றி பெறக் கூடாது. அதற்காக எந்த கூட்டணியையும் ஏற்க தயாராக இருக்கிறோம். கூட்டணி இல்லை என்றாலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம்.

நானும் – ஓபிஎஸ்யும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். வரும் காலத்தில் எப்படி செயல்படுவோம் என்பது குறித்து ஒன்றாக இணைந்து முடிவு எடுப்போம். நீட் தேர்வு ரத்துக்காக அனைத்து கட்சிகளும் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். நாங்களும் அதற்காக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் திமுக ஒரே கையெழுத்தில் நீக்கி விடுவோம் என கூறினார்கள். அவர் எப்படி நீக்குவார் என பார்த்துக் கொண்டிருக்கிறோம். டெல்லியில் போராட்டம் நடத்தட்டும். அதனால் என்ன விளைவு வருகிறது என்று பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்