காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் நேற்று பகலில் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்டார். பிரபாகரனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி வசூல்ராஜாவின் கூட்டாளிகள் ரகு மற்றும் ஹசன் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்ததை தொடர்ந்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் ரகு மற்றும் ஹசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைஅடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த ரவுடிகள் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் ரகு, ஹசன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.