குரூப்-2 தேர்வில் குளறுபடி: டிஎன்பிஎஸ்சி கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் அதிரடி மாற்றம்…!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 மற்றும் 2A பதவிகளில் 828 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பரில் வெளியான நிலையில், குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2A பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்.8ம் தேதியான இன்று நடைபெறவிருந்தது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 38 மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி, மாநிலக் கல்லூரி என 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் அமைக்கப்பட்ட 2 தேர்வு மையங்களில் 1,800 மாணவர்களும், அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரியில் 3 மையங்களில் 600 மாணவர்களும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று தேர்வெழுத வந்த தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் குளறுபடி ஏற்பட்டது. அதாவது, ஹால் டிக்கெட்டில் டிஜி வைஷ்ணவா கல்லூரி முகவரி இடம் பெற்றிருந்ததால், அனைவரும் அங்கு சென்றனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் வருவதை பார்த்த கல்லூரி நிர்வாகம், சந்தேகத்தில் ஹால் டிக்கெட்டை வாங்கிப் பார்த்தது. ஆனால், அதில் டிஜி வைஷ்ணவா கல்லூரி முகவரியே இருந்துள்ளது. இதனால், குழப்பம் ஏற்பட்டது. அப்போது, ஹால் டிக்கெட்டுகளில் நந்தனம் கல்லூரியில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான முகவரி டிஜி வைஷ்ணவா என இடம்பெற்று இருப்பது இன்று காலையில் தெரியவந்தது. இதனால், அனைவரையும் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இப்படி கடைசி நேரத்தில் கூறினால் எப்படி செல்ல முடியும்? என தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருந்த குரூப்-2 தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.