மாநில அரசுகள் இலவசங்களை வாரி வழங்கினால் பொதுமக்கள் எப்படி உழைப்பார்கள்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி…
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்தாமல் இப்படி இலவசங்களை வாரி வழங்கினால், பிறகு பொதுமக்கள் எப்படி உழைப்பார்கள் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியது. பல மாநில அரசுகள் தேர்தலுக்கு சற்று முன் இலவசங்களை வாரி வழங்குவது நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்து விடும் என்று எச்சரித்த உச்ச நீதிமன்றம், இந்தப் போக்கு இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. மின்சார சட்டத்தில் மத்திய அரசு கடந்த 2024-ல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. மின்சார திருத்தச் சட்டம் 2024-ன் 23-வது பிரிவை எதிர்த்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பக்ஷி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு இன்று( பிப்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களின் மின் கட்டணத்தை மாநில அரசு ஏற்றுக் கொள்வது தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை நோக்கி தலைமை நீதிபதி சூர்ய காந்த் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதாவது, பொதுமக்களின் நலன் கருதி தானா இலவச திட்டங்களை ஒரு மாநில அரசு செயல்படுத்துகிறது? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், “இலவச திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் எந்தவிதமாக கலாச்சாரத்தை வளர்த்தெடுத்து வருகிறோம்?” எனவும் வினவினார். “நாங்கள் தமிழ்நாட்டை மட்டும் குறிப்பிட்டு பேசவில்லை; மாறாக ஒட்டு மொத்த தேசத்தை பற்றி பேசுகிறோம் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது. மேலும், “தங்களின் மின் கட்டணத்தை தாங்களே செலுத்தும் திறனுள்ள மற்றும் கட்டணத்தை செலுத்த இயலாதவர்கள் என்று பொதுமக்களை வகைப்படுத்தி, மின் கட்டணத்தை செலுத்த இயலாத ஏழை மக்களுக்காக இலவச திட்டத்தை ஓர் மக்கள் நலன் சார்ந்த அரசு நடைமுறைப்படுத்தினால் அது புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால், அவ்வாறு எந்தவொரு வகைப்பாடும் இல்லாமல், அனைவருக்கும் இலவசத்தை அள்ளி வழங்கினால், அது ஏதோ எல்லோரையும் திருப்திப்படுத்தும் கொள்கையாக இருக்காதா?” எனவும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் உணவு, உடை மற்றும் பொதுமக்களை மகிழ்விக்கும் பொருள்கள் வாரி வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்த நாட்டில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது?” என்ற கேள்வி எழுகிறது என்றும் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார். மின்சாரம், பாசன வசதி என நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு நீண்டகால திட்டங்களை செயல்படுத்தாமல், இப்படி காலை இலவச உணவு, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், இலவச மின்சாரம் என பொதுமக்களின் அடிப்படை தேவைகளை இலவசமாக அளிப்பது மட்டுமில்லாமல், அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்தினால் பிறகு அவர்கள் எப்படி உழைப்பார்கள். சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்த நீதிபதிகள், “தேர்தல் நெருக்கும் சமயத்தில் திடீரென ஏன் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன?” என்றும் கேள்வி எழுப்பினர். பல மாநில அரசுகள் தேர்தலுக்கு சற்று முன் இலவசங்களை வாரி வழங்குவது நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்துவிடும்” என்று எச்சரித்த நீதிபதிகள், “இலவச கலாச்சாரத்தை களைய வேண்டிய நேரம் வந்து விட்டது” எனவும், எனவே, “இது குறித்து நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டோர் தீவிரமாக சிந்திக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினர்.

Comments are closed.