மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்- அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமான பேச்சு…!
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அப்போது அவர், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி பதவியேற்ற உடன் முறையாக பயிற்சி பெற்ற 23 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூக நீதிக்காக நமது திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடர்ந்து போராடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பேருந்து தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக உள்ளது திராவிட மாடல் ஆட்சி. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது. நமது முதலமைச்சர் ஆட்சியில் மகளிர் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகம் ஆக உள்ளது. பள்ளி குழந்தைகள் பசியின்றி பயில அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் காலை உணவுத் திட்டம். பெற்றோர் இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்க அன்புக்கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். வளர்ந்த நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டியிடுகிறது, மற்ற மாநிலங்களோடு அல்ல. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன்தான் நாம் போட்டி போடுகிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.