Rock Fort Times
Online News

அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த போது கைக்குட்டையால் முகத்தை துடைத்தேன், இதில் என்ன அரசியல் இருக்கிறது?- கேட்கிறார் இ.பி.எஸ்…!

சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த போது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற காட்சியை ஊடகம், பத்திரிக்கை மக்கள் இடத்திலே காண்பித்து விட்டனர். ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. பிரதமர் தமிழகம் வந்தபோது திமுகவினர் கருப்புக்கொடி காட்டினர். எதிர்க்கட்சியாக இருந்த போது இப்படி பட்ட நிலைப்பாடு. ஆட்சியில் உள்ள போது பிரதமர் சென்னை வந்தபோது வெள்ளை குடை பிடித்தவர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கருப்புக்குடை பிடித்தவர். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. துணை குடியரசு தலைவரை நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன். அவருக்கு வாழ்த்து கூறினோம். அப்போதும் நான் அரசாங்க காரில் தான் சென்றேன். இதை எல்லாம் திட்டமிட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவார்கள் என்று தெரிந்து தான் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான காரில் தான் நான் அவரை சந்திக்க சென்றேன். பிறகு உள்துறை அமைச்சரை சந்திக்கும் போதிலும் நானும் கட்சி நிர்வாகிகளும் அரசாங்க காரில் தான் சென்று அவரை சந்தித்தோம். சந்தித்துவிட்டு அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். நான் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியேறினேன். அப்போது காரில் ஏறுவதற்கு முன் முகத்தை கைக்குட்டையால் துடைத்தேன். அதனை அரசியல் ஆக்கியது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது. முகத்தை துடைக்கிறேன். இதில் என்ன அரசியல் இருக்கிறது என கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்