தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன்…* திருச்சியில் மாநிலங்களவை காங்.வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பேட்டி…!
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன. இதில், திமுகவுக்கு 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். அவர்களில் திமுகவுக்கு இரண்டு இடமும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு ஒரு இடமும், தேமுதிகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவிற்கு இரண்டு இடங்கள் கிடைக்கும். திமுக சார்பில் திருச்சி சிவாவும், பேராசிரியர் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன், தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்த கிறிஸ்டோபர் திலக் இன்று( மார்ச் 7) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 8 வருடமாக காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மணிப்பூர், சிக்கிமில் பணியாற்றியது அது காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு, பொறுப்பு. தற்பொழுது பணியாற்ற இருப்பது ஒரு கான்ஸ்டியூசனல் போஸ்ட். மாநிலங்களவையில் பேசக்கூடிய ஒரு பணி. தமிழகத்தின் பிரச்சனைகளை எடுத்துரைக்க கிடைத்த வாய்ப்பு. இதனை நல்லபடியாக பயன்படுத்துவேன். திருச்சியை அடுத்த கட்டத்திற்கு ஒரு சிறந்த நகரமாக கொண்டு செல்லும் வழிவகை முயற்சி மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். மோடி அடிக்கடி தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு? கும்பகோணம் டிகிரி காபியை ஆத்துவது போல் ஒரு வேட்டி சட்டையை மாட்டி விட்டு சீன் கொடுத்து விடுவார்கள். கொடுத்த ஸ்கிரிப்டை அவர் பேசிவிட்டு சென்றுவிடுவார். அவர் ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் பொழுது என்ன நடந்திருக்கிறது என்பதை உற்று நோக்கி பார்க்க வேண்டும் என தெரிவித்தார். பேட்டியின் போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Comments are closed.