திருச்சி மாவட்டம், இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும் (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற மகனும், ரித்திகா (6) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 3 வருடங்களாக நர்மதா தனது குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காங்கயம் சாலையில் ஓலப்பாளையம் அடுத்த சுக்குட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நூல் மில் குடியிருப்பில் தங்கி இருந்து அதே மில்லில் வேலை செய்து வந்தார். சிவக்குமார் அவ்வப்போது வெள்ளகோவில் சென்று குழந்தைகளை பார்த்து வந்துள்ளார். அந்தவகையில், கடந்த சனிக்கிழமை குழந்தைகளை பார்க்க வெள்ளகோவில் சென்ற சிவக்குமார் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை தனது மகன் குருபிரசாத்தின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடுவதற்காக அங்கேயே தங்கி உள்ளார். அன்றைய தினம் இரவு குருபிரசாத் பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடி உள்ளனர். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவு சிவக்குமார் அவசரம், அவசரமாக பதற்றத்துடன் வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதை அருகே குடியிருந்தவர்கள் பார்த்தனர். இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள், நர்மதா வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நர்மதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மனைவியை கொலை செய்த சிவக்குமார், காங்கேயம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மீண்டும் இருவரும் சேர்ந்து வாழலாம் என சிவக்குமார் தெரிவித்தபோது நர்மதா மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து நர்மதாவை குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தாய் இறந்த நிலையில், தந்தை கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களது இரு குழந்தைகள் தவித்து வருகின்றனர்.
Comments are closed.