Rock Fort Times
Online News

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கட்டணம் எவ்வளவு?…

தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 3,450 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் மருத்துவ பல்கலையில், 550 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. அதில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. அந்த இடங்களுக்கான இந்தாண்டு கல்வி கட்டணத்தை நீதிபதி ஆர்.பொங்கியப்பன், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ப.செந்தில்குமார், டாக்டர் கீதாலட்சுமி, ஆர்.பாலசந்திரன், கே.ஆனந்தகண்ணன் ஆகியோர் அடங்கிய குழு பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின் இறுதி செய்துள்ளது. அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4.35 லட்சம் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை தவிர, நான்கு தனியார் பல்கலைகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தலா 5.40 லட்சம், நிர்வாக இடங்களுக்கு 16.20 லட்சம், என்.ஆர்.ஐ., இடங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, கூடுதலாக, 60,000 ரூபாய் வரை மேம்பாட்டு நிதியாக வசூலிக்கலாம். மற்றபடி, கல்வி கட்டணம், சிறப்புக் கட்டணம், சேர்க்கை கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களும் இதற்குள் அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன், அதற்கான கட்டண விவரங்களை முழுமையாக அறிந்து முடிவு எடுக்குமாறு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவுக் கட்டணம் இதில் அடங்காது. இதைத் தவிர, எந்த வகையிலும் கூடுதல் கட்டணமோ, நன்கொடையோ பெறக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்