Rock Fort Times
Online News

398 சிலிண்டர்கள் பதுக்கல்: மதுரையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போா் தொடுத்து வருகின்றன. இந்தப் போா் காரணமாக உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, பலா் ரூ.3,000 வரை விற்பனை செய்கின்றனா். வேறு வழியில்லாமல் பல உணவக நிா்வாகத்தினா் கேஸ் சிலிண்டர் வாங்கி தொழிலை நடத்துகின்றனா். இதனால், உணவு வகைகளின் விலையை உணவக நிா்வாகங்கள் உயா்த்தியுள்ளன. இந்தநிலையில், மதுரையில் சில பகுதிகளில் உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை கேஸ் சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர், மதுரை கோவில்பாப்பாகுடி ஆத்தாளை பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் வீட்டின் அருகே காலியிடத்தில் சோதனை மேற்கொண்டதில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை கேஸ் சிலிண்டர் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் உள்பட மொத்தம் 209 கேஸ் சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் (27) என்பவரின் வீட்டருகே சோதனை செய்தபோது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 63 மானிய விலை கேஸ் சிலிண்டர் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் உட்பட மொத்தம் 189 உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு இடங்களிலும் 398 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் மானிய விலை சமையல் எரிவாயு உருளை பதுக்கல் தொடர்பாக கள்ளச்சந்தை தடுப்புக் காவல் (குண்டர்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்