Rock Fort Times
Online News

ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சுமார் 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கடந்த ஜூன் 5-ம் தேதி வெளியிட்டது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 4 நிறுவனங்களுக்கு பாமாயில் விநியோகத்துக்கான ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வருகிற 29-ம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு இந்த நிறுவனங்கள் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் விநியோகம் செய்ய வேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவில்லை எனக் கூறி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ள கேடிவி ஹெல்த் ஃபுட் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், சரியான விகிதாசார அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 3.6 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ள எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்கவும், 1.50 கோடி பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டிய எம்ஜிஎம் ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது, சரியான அல்ல. எனவே, பாமாயில் விநியோகம் தொடர்பாக கடந்த செப். 29-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விகிதாசார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர். சரவணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாமாயில் விநியோகம் தொடர்பான செப். 29-ம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு வருகிற நவ. 2-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை யும் அன்றைய தினத்துக்கே ஒத்தி வைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்