பகல் நேரங்களில் கடைவீதிக்குள் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை….
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி ரோடு, நந்தி கோவில் தெரு சந்திப்பு, தெப்பக்குளம் பகுதிகளில் திருச்சி மாநகர போலீஸ் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ந.காமினி ஐபிஎஸ் இன்று ( 02.11.2023 ) திறந்து வைத்து செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில் :-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், திருடர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கடைவீதி சாலைகளில் செல்ல அனுமதி கிடையாது.சரக்குகளை ஏற்றி, இறக்க இரவு 11 மணிக்கு மேல் கடை வீதி பகுதி சாலையில் வந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. திருச்சி கடைவீதி சாலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படதாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தரைக்கடை வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம்.மேலும் திருச்சி மாநகராட்சி அதிகாரியுடன் இணைந்து பேசி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையோர கடைகள் மற்றும் தரைக் கடைகளை வியாபாரம் செய்ய அனுமதிப்போம். என்.எஸ்.பி. ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளினர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்ற நடத்தை உடையவர்களை கண்காணிக்க 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தீபாவளி பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாவண்ணம் திருச்சி மாநகரில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக நாள் முழுவதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அலுவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள பனானா லீப் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானம் போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் தங்களது உடைமைகளை ஒப்படைக்க வேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், காவலர் என்று கூறிக்கொண்டு தங்கள் நகைகளை பத்திரமாக பொட்டலத்தில் மடித்து தருகிறேன் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் அன்பு நேரடி கண்காணிப்பில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்காக மொத்தம் 115 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸ் கமிஷனர் காமினி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.