திருச்சியில் காலை நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள், தரைக்கடை வியாபாரிகள் கடும் அவதி…!(வீடியோ இணைப்பு)
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று(21-10-2024) காலை 8 மணிக்கு மேல் மாநகரில் ரயில்வே ஜங்ஷன், மத்திய பேருந்து நிலைய பகுதி, உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து மாநகரின் மற்ற பகுதிகளான தென்னூர், பாலக்கரை, டிவிஎஸ் டோல்கேட், சத்திரம் பேருந்து நிலையம், கம்பரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பகுதிகளில் கன மழை பெய்ததால் மழை நீர் வெள்ளம் போல சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மத்திய பேருந்து நிலையத்தில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து ஓடியது. திடீரென பெய்த இந்த மழையால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், தீபாவளியை முன்னிட்டு ஆங்காங்கே தரைக்கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சிறு வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த இந்த கனமழை அதன் பிறகு தூறலாக மாறி நின்று போனது.

Comments are closed.