ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் பேசி திமுகவை காலி செய்தார்கள். ஏன் இப்படி கடுமையாக பேசுகிறார்கள் என அப்போது நினைத்தேன். இப்போது அவங்க சொன்னதை தான் நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி.இந்த முறை தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையில்தான் போட்டி. அதேபோல் எதிரிகள் யார் என்று கூறிவிட்டு நாங்கள் களத்துக்கு வந்துள்ளோம். நாங்கள் கூறியுள்ள எதிரிகளை மட்டும் தான் எதிர்ப்போம். களத்துல இருக்கிறவங்களை மட்டும்தான் நாங்கள் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்கும் ஐடியா இல்லை என்று தெரிவித்தார். திமுகவை விஜய் தீய சக்தி என்று ஆவேசமாக விமர்சித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுக இளைஞரணியின் அடுத்த மண்டல மாநாடு எப்போது நடத்தப்படும் என்பதை கட்சித் தலைவர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். தொடர்ந்து விஜய்யின் தீயசக்தி விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், என்றாவது விஜய்யிடம் இப்படி கேள்வி கேட்டிருக்கிறீர்களா?, அவர் இதுவரை பத்திரிகையாளர்களை சந்தித்தது உண்டா? என்று தெரிவித்தார்.

Comments are closed.