Rock Fort Times
Online News

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினாரா?- உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி…!

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது, பரிசீலிக்கத் தவறுவது, செயல்படாமல் இருப்பது, புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார் என்று குற்றம்சாட்டி, தமிழக அரசு தொடர்ந்த மனு இன்று(04-02-2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது. மேலும், ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை பேரவையில் நிறைவேற்றினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். கடந்த 12ஆம் தேதி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2023ம் ஆண்டு வரை தமிழக அரசு சார்பில் 12 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் 2ஐ குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார். மற்ற 10 மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டார் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினாரா? அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தனர். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஆளுநர் தடையாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர், மசோதாக்கள் தொடர்பாக முன்பே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.அதற்கு நீதிபதிகள் கூறுகையில், ஆளுநர் – மாநில அரசு இடையேயான மோதலால் மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. மசோதாக்களை ஜனாதிபதிக்கு, அவர் அனுப்பி வைத்துவிட்டபின்னர் என்ன நிவாரணத்தை நாங்கள் தர முடியும்? எந்தெந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியும்? ஆளுநர்கள் ஏன் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்