2021-22-ம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கை தொடர்பான உரையின்போது, வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். அதன்படி, வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஒரு குடும்பத்தில் 2 பேர் இருந்தால், அதில் முதலில் யார் பட்டப்படிப்பை முடிக்கிறார்களோ அவர்களுக்கு முதல் தலைமுறைபட்டதாரி சான்றிதழ் வழங்கலாம். இதில் வீட்டில் முதல் பட்டதாரி 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிற்கல்வி, மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருந்தாலும், வீட்டில் உள்ள அடுத்தபட்டதாரி 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்தாலும் முதல் பட்டதாரிக்கே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
அண்ணன், தம்பிகள் மனைவி மற்றும் மகன், மகள்களுடன் இணைந்து கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் இருந்தால் அந்த குடும்பத்தில் முதலில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. ஆண்டு வரையறையும் கிடையாது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தை சேர்ந்த முதல் பட்டதாரி மாணவ-மாணவிகள் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.